மும்பை: தர்மேந்திரா-ஹேமமாலினி தம்பதியரின் மூத்த மகளான நடிகை இஷா தியோல் திருமணம் நேற்று மும்பையில் கோலாகலமாக நடந்தது. மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர் பாரத் தக்தானியை அவர் தென்னிந்திய முறைப்படி மணந்தார்.
இந்தி திரைப்பட உலகில் நட்சத்திர ஜோடியாகத் திகழ்பவர்கள் தர்மேந்திரா- ஹேமமாலினி தம்பதி. இவர்களின் மூத்த மகள் இஷா தியோல். இந்தி திரைப்பட உலகில் பிரபல நடிகையான இஷாவுக்கும், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் பாரத் தக்தானிக்கும் திருமண நிச்சயதார்த்தம் கடந்த பிப்ரவரி 12-ந் தேதி நடந்தது.
இந்த நிலையில் அவர்களது திருமணத்தையொட்டிய சடங்குகள் கடந்த 3 நாட்களாக கோலாகலமாக நடந்து வந்தது.
இஷா தியோல்-பாரத் தக்தானி திருமணம் நேற்று காலை மும்பை ஜுகு பகுதியில் உள்ள இஸ்கான் கோவிலில் நடந்தது. இதற்காக மணமகன் பாரத் தக்தானி வெள்ளை குதிரையில் அழைத்து வரப்பட்டார். மாப்பிள்ளையை தர்மேந்திரா-ஹேமமாலினி தம்பதியினர் வரவேற்றனர்.
தென்னிந்திய பாரம்பரியப்படி...
இஷா தியோல் சிவப்பு மற்றும் தங்க சரிகை கொண்ட காஞ்சீபுரம் பட்டுச்சேலை அணிந்து இருந்தார். இந்த சேலை சென்னையில் வாங்கப்பட்டு, அதில் கூடுதலாக சில அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மணமகன் பாரத் தக்தானி மராட்டிய பாரம்பரியத்தின் தலைப்பாகை அணிந்திருந்தார். இந்த ஜோடியின் திருமணம் தென்னிந்திய பாரம்பரியத்துடன் இந்துமுறைப்படி நடந்தது.
திருமண ஜோடியை ஏராளமான திரைப்பட நட்சத்திரங்கள் குவிந்து வந்து வாழ்த்தினர். குறிப்பாக அமிதாப்பச்சன், அவரது மகன் அபிஷேக்பச்சனுடன் வந்து வாழ்த்தினார். மனோஜ் குமார், வினோத் கன்னா, பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலா, பூனம் சின்ஹா, அனுமாலிக் உள்பட பலர் வந்திருந்தனர்.
இஷா தியோல்-பாரத் தக்தானி திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை) மும்பையில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடக்க உள்ளது.