சுமா ரங்கநாத்தை நினைவிருக்கிறதா... தொன்னூறுகளின் ஆரம்பத்தில் பெரிய அளவில் வருவார் என்று பேசப்பட்ட நடிகை. முதல் படம் புதுப்பாட்டு (எங்க ஊரு காதலைப் பத்தி என்னா நினைக்கிறே... பாட்டு ஞாபகத்துக்கு வருதா...) அதன் பிறகு விஜயகாந்த் ஜோடியாக மாநகரக் காவல் படத்தில் நடித்தார்.
தொடர்ந்து சில தமிழ்ப் படங்களில் நடித்தவர், இந்தியில் பிஸியானார். ஃபாரெப், ஆ அப் லோட் சலேன் என வெற்றிப் படங்களில் நடித்தவர், மலையாளப் படங்களிலும் நடித்தார்.
2006-ல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அது சீக்கிரமே விவாகரத்தில் முடிய, மீண்டும் கன்னடப் படங்களில் பிஸியாகிவிட்டார்.
அவரை தமிழுக்கு மீண்டும் அழைத்து வருகிறார் இயக்குநர் விஷ்ணுவர்தன். அஜீத் நடிக்கும் புதிய படத்தில் இவருக்கு முக்கிய வேடமாம்.
தனது தமிழ் மறுபிரவேசம் பற்றி சுமா (சுமன் ரங்கநாதன்) கூறுகையில், "பத்தாண்டுகளுக்கு மேலாகிவிட்டது தமிழ் சினிமா பக்கம் வந்து. இத்தனைக்கும் நன்றாக தமிழ் பேசத் தெரிந்த நடிகைதான் நான். எனக்கான டப்பிங்கை கூட நான்தான் பேசுகிறேன்.
பாலித் தீவில் விடுமுறையைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்தப் படத்தில் ஒரு பத்திரிகையாளராக நடிக்கிறேன். பெங்களூரில் கடந்த சனிக்கிழமை முதல் காட்சி எடுத்தார்கள். ரொம்ப வித்தியாசமாக உணர்ந்தேன்,"
என்றார்.